வாழ்க்கை ஒரு சினிமா சினிமா!! பகுதி-7

221

றவுகளுக்கு இடையே இருக்கும் சிக்கல்கள் என்கிற ஒற்றை சொற்றொடரில் நாம் இயக்குனர் சிகரம்  பாலச்சந்தரின் படங்களை அடைப்பது சற்று அநியாயம்தான் என்றாலும் கூட அதில் உண்மையும் இருக்கிறது. அவரின் 90% படங்கள் இவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதுதான். சமூகப்படங்கள் தமிழ் சினிமாவில் வேரூன்ற தொடங்கிய காலத்தில் இருந்தே கணவன்-மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகள் பற்றியும், திருமண பந்தத்துக்கு வெளியே ஏற்படும் உறவுகள் பற்றியும் படங்கள் தொடர்ந்து வந்தவண்ணம்தான் இருக்கின்றன. இவற்றில் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவீதம் சமுதாயத்தை பிரதிபலிக்கவும் தவறுவதில்லை. மற்ற விஷயங்களில் எப்படியோ ஆனால் இந்த கணவன்-மனைவி உறவுப்படங்கள் எப்போதும் சமூகத்தை ஒத்தே இருக்கின்றன.

manmadha leelaiமன்மத லீலை படம் நான் பார்த்தது ஏழாம் வகுப்பு படிக்கையில். எங்கள் பள்ளிக்கு அருகில் இருக்கும், நான் வழக்கமாய் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கிரிக்கெட் பார்க்கும் ஜோதி அண்ணன் வீட்டில். அவரின் இல்லாள் அன்று ஊருக்கு போயிருந்தார். ஒரு சனிக்கிழமை என்று ஞாபகம். முதலில், “நீயெல்லாம் இந்தப் படம் பார்க்கக் கூடாதுடா..” என்று சலித்தவர் பின்னர் “சனியன் சொன்னாலும் கேட்கமாட்டான்..” என்கிற பாவனையில் அந்த தோஷிபா வீடியோ டெக்கில் படத்தை ஓடவிட்டார். கமல் எதிர்வீட்டு பெண் வீட்டில் கொஞ்சிப்பேசும் காட்சி வந்த சில நிமிடங்களில் என்னை வீட்டுக்குப் போ என விரட்டாத குறையாக சொல்ல நான் கிளம்பிவிட்டேன். இந்த சம்பவம் நடந்த சிறிது நாட்களில் அவரின் மனைவி இன்னொருவருடன் காதல் கொண்டு வீட்டை விட்டே போய்விட்டார். அரசல்புரசலாக தெரிந்த காரணத்தில் ஜோதி அண்ணனுக்கு ஆண்மை குறைவு என்றும், குழந்தைப் பேறு இல்லையென்றும் அதனால் அவரின் மனைவி ஓடிவிட்டார் என்றும் கேள்விப்பட்டோம். ஏனோ இன்று இந்த சம்பவங்களை யோசிக்கையில் பல்வேறு காரணங்கள் உள்ளே முட்டிமோதி அலைபாய்கிறது எண்ணங்கள். ஆயிரம் கட்டுப்பாடுகள் இருந்தாலும், எவ்வளவோ புனிதப்படுத்தப்பட்ட சடங்குகள் இருந்தாலும் கணவன்-மனைவி உறவு என்பதை இதுவரை வரையறுக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை.

உண்மையில் நம் சமூகம் எந்தளவுக்கு சாதியை போற்றிப் பாதுகாக்கிறதோ அதே அளவு இந்த கணவன் மனைவி உறவையும் காக்க நினைக்கிறது. ஆனால் பெரும்பாலும் மிஞ்சுவது என்னவோ தோல்விதான். காரணம் அந்த உறவு ஒரு அங்கீகரிக்கப்பட்ட செக்ஸ் உறவை வழங்கும் ஒரு சாதனமாக மட்டுமே இப்போதும் தொடர்ந்து வருவதுதான். அதிலும் கணவனின் தேவையை நிறைவேற்ற, வம்ச விருத்தி என்கிற சொல்லைக் காப்பாற்ற ஒரு பெண் தேவை என்கிற நோக்கம் அடிமனதில் புதைந்திருப்பதுதான். கணவன் வேலைக்கு செல்வதும், மனைவி வீட்டை பார்த்துக் கொள்வதுமான அமைப்பு முற்றிலும் மாறிவிட்டது என்கிற மாயபிம்பம் மட்டுமே நம் கண்முன்னால் நிற்கிறது. உண்மையில் மனைவி கணவனை விட ஒரு ரூபாய் அதிகம் சம்பாதித்தாலும் கூட அங்கே பூகம்பம் ஒன்று எப்போதும் வெடிக்க காத்துக்கொண்டுதான் இருக்கிறது.

நகரங்களில் வேலைக்கும் போய்க்கொண்டு, வீட்டையும் பராமரிக்கும் இல்லத்தரசிகள் இங்கே லட்சக் கணக்கில் உண்டு. வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு செல்வதோடு கணவன் மனைவி சமமாகிவிடுவதில்லை. கணவனை துறந்துவிட்டு என் வாழ்க்கையை நான் வடிவமைக்கிறேன் பார் என்று வெளியே வரும் பெண்களுக்கு உடனே மரியாதையும், அங்கீகாரமும் நாம் கொடுத்துவிடுகிறோமா என்ன? கிடையவே கிடையாது. காகிதத்தில் ஆயிரம் எழுதலாம் நாம். கண்ணுக்கு முன்னால் இருக்கும் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது.

இந்தக் கள்ளக்காதல் என்னும் வாசகத்தை கண்டறிந்த நாளிதழ்கள் என்றேனும் அதற்கு பின்னால் இருக்கும் உளவியலைப் பற்றி பேசி இருக்கிறதா என்று பார்த்தால் விடை பூஜ்ஜியம்தான். எல்லாம் அன்றைய பக்கங்களை நிரப்பும் ஒரு செய்திதான். அதைமீறி ஒன்றுமே இல்லை. திருட்டுப் பயலே படம் இந்த கள்ளக்காதலை மையமாக கொண்டதுதான். ஆனால் அது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு கதாநாயகனின் பார்வையில் நகர்ந்து போவதால் அது சொல்லவந்த செய்தியை யாரும் சரியாக கவனிக்கவில்லை. தொழில் தொழில் என்று அலையும் ஒரு மிகப்பெரிய பணக்காரனின் மனைவி அந்த கணவனின் நண்பனுடனே காதல் கொள்வாள். இதை அறிந்த கணவன் அந்த நண்பனை கொன்றுவிட்டு மனைவியை மன்னித்துவிடுவான். அவன் மனைவியை மன்னிக்கக் காரணம் அவள் வந்தபின்தான் அவனுக்கு தொழில் நல்லபடியாக முன்னேறியது என்கிற அவனின் நம்பிக்கை. மேலும் அவள் ஏன் அங்ஙனம் போனாள் என்கிற உண்மையையும் கூட அவன் அறிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ள தொடங்குவதாய் படம் முடியும். ஒரு நல்ல முயற்சி.

இதை இன்னும் தெளிவாக சொன்ன படம் எங்கேயோ கேட்ட குரல். இந்தப்படம் பெரிய வெற்றி அடையவில்லை. காரணம் திருமணத்திற்குப் பின் ஓடிப்போன மனைவியை கணவன் மீண்டும் ஏற்றுக் கொள்வதை ராவாக காட்டியது. ஆனால் திருட்டுப் பயலே-வில் அந்த தவறை இயக்குனர் செய்யவில்லை. தன் மனைவியை மயக்கியவனுக்கு தண்டனை கொடுத்து விட்டுதான் அவன் தன் மனைவியை கட்டி அணைக்கிறான். சமூக நோக்கில் ஒரு ஆணின் மனநிலை இதுதான். கணவன் மேல் ஆயிரம் பழிகள் இருந்தாலும் கூட கெட்டுப் போனவளை புனிதமாக்குதல் என்கிற கோட்பாடுக்கு ஏற்ப யாரேனும் ஒருவனுக்கு தண்டனை கொடுத்த பின்னரே மனம் சாந்தியடைகிறது. இதையேதான் சினிமாவிலும் அவன் பிரதிபலிக்கிறான். அவனது உள்மன வேட்கைக்கும் ஆறுதல் அளிக்கும் படங்களை அவன் ஓடவைக்கிறான். இது பெரும்பான்மையின் மன ஓட்டத்தை அறிந்து அதை சாமர்த்தியமாக சினிமாவில் புகுத்திய இயக்குனரின் வெற்றி என்றும் கொள்ளலாம்.

ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த  செல்லத்தம்பியின் மனைவி அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் பத்து அழகான பெண்களில் முதல் மூன்று இடத்தில் வருவார்.வாடகைக்கு விடுவதற்கென்று ஒரு வேன் இருந்தது. அதற்கு ஓட்டுனராக இருந்தது என் அண்ணனுடன் படித்த பொன்ராஜ் அண்ணன். சிறிதுநாட்களில் அந்த பெண்மணிக்கும் அவருக்கும் உறவு ஏற்பட்டுவிட அவர் வீட்டின் அருகில் வசிக்கும் என் நண்பன் அதை கதையாக சொல்ல ஆரம்பித்தான்.உடலுறவு கதைகளை கேட்க கசக்குமா என்ன? வாயைப் பிளந்து கதைகள் கேட்போம்.

உடலுறவு கதைகளை கேட்க கசக்குமா என்ன? வாயைப் பிளந்து கதைகள் கேட்போம்.

சிறிது நாட்களில் இந்த விஷயம் செல்லத்தம்பிக்கு தெரிந்துவிட, அவருக்கு தெரிந்துவிட்டது என்பதை அறிந்த அன்று இரவே ஓல்ட் மங்-கில் விஷத்தை கலந்து குடித்துவிட்டு இறந்தார் பொன்ராஜ். உண்மையில் அந்த அழகான பெண்மணி தன் வாழ்க்கையில் முதன்முதலாக உயிருக்கு உயிராக நேசித்தது பொன்ராஜை மட்டுந்தான். அதற்கு சான்றாக அந்த பெண்மணி எழுதிய காதல் கடிதங்களும், பரிசுப் பொருட்களும் என் நண்பன் வாயிலாக எங்களுக்கு அவர் இறப்பதற்கு முன்பே தெரிய வந்திருந்தது. செல்லத்தம்பி கிட்டத்தட்ட ஒரு சைக்கோ. அவன் அந்த பெண்மணிக்கு நடத்திய கொடுமைகளை எல்லாம் நாங்கள் ஓரளவு அறிந்தே இருந்தோம். அவரின் காயத்துக்கு மருந்தாக இவன் இருந்த விஷயம் எங்களைத் தாண்டி வேறு யாருக்குமே இதுவரை தெரியாது. பொன்ராஜின் மரணம் சமூகத்துக்கு ஒரு நீதியை வழங்கி இருந்தது. அந்த பெண்மணி தூற்றப்பட்டார். செல்லத்தம்பி கதாநாயகன் ஆனார். சிறிதுநாட்களில் நோய்வாய்ப்பட்டு அந்த பெண்மணியும் இறந்தார்.

இந்த சம்பவம் நமக்கு முன் எழுப்பும் கேள்விகள் அளப்பரியது. எங்களுக்குத் தெரிந்த உண்மைகள் எந்தவித உதவியையும் இருவருக்குமே வழங்கி இருக்காது. அவர்களை நல்லவர்கள் என்று நிரூபித்திருக்க வாய்ப்பே இல்லை. காரணம் மிக மிக எளிது. சமூகம் என்கிற மனநிலைப் பிறழ்ந்த கூடத்தில் இங்கே சட்டம் என்று வகுக்கப்பட்டிருக்கும் எதற்கும் அதன் விதிமுறைகள் மீறப்படுவதற்கான காரணங்கள் தேவையே இல்லை. தண்டனைகள் மட்டுமே போதும். ஒரு கணவனை இழந்த பெண்ணோ அல்லது கணவனை விட்டுப் பிரிந்து வாழ்கிற பெண்ணோ இங்கே எளிதில் இன்னொரு ஆணை தேர்ந்தெடுத்து விடமுடியாது. அவர்தம் குடும்பத்தாரின் சம்மதம், விருப்பம் இவையாவும் அதற்கு தேவையாய் இருக்கிறது. குடும்பத்தார் சம்மதம் இருந்தாலுமே கூட உறவினர்களின் ஏச்சு பேச்சுக்களை கடந்தாக வேண்டிய சூழ்நிலையும் நிலவுகிறது.

வாழ்க்கை ஒரு சினிமா சினிமா முழுவதும் படிக்க
வாழ்க்கை ஒரு சினிமா சினிமா முழுவதும் படிக்க கிளிக் செய்யவும்

நகரங்களில் நவயுக  பெண்கள் திருமண பந்தத்தை எளிதில் முறித்துக் கொள்வதும், பின்னர் வேறொருவரை திருமணம் செய்து கொள்வதும் எளிதாகிவிட்டது என்று நாம் எவ்வளவுதான் ஆறுதல்படுத்திக் கொண்டாலும் அவர்கள் மீதான சமூகப் பார்வையை இங்கே கணக்கில் கொள்வதில்லை. செல்வம் என்றொரு படம் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. என் தோழி  பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. அதில் சிவாஜியும், கே.ஆர்.விஜயாவும் தம்பதிகள். அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் கோளாறினால் இருவரும் ஒரு வருடம் தாம்பத்யம் கொள்ளக்கூடாது என்று ஒரு வசனம் வரும். என் தோழியோடு  அமர்ந்து படம்  பார்த்துக்கொண்டிருந்த பக்கத்துவீட்டு பெரியம்மா அந்த வசனத்தை கவனிக்கத் தவறிவிட்டார். அவர் பொதுவாக,” ஜோசியக்காரன் என்ன சொன்னான்?” என்று கேட்க, ஆர்வமாக படம்  பார்த்துக் கொண்டிருந்த அவள் ,” அது ஒரு வருஷம் தாம்பத்ய உறவு வச்சிக்க கூடாதாம்..” என்று சொல்ல, உடனே அந்த பெரியம்மா ,” இங்க பார்த்தீங்களா.. இந்த வயசுல இவ பேசுற பேச்சை..” என்று பொத்தம்பொதுவாக போட்டுக் கொடுத்துவிட அதன்பின் மண்டகப்படி நடந்தது அவளுக்கு.

செக்ஸ் பற்றிய புரிதல்களை, கணவன்-மனைவிக்கிடையே இருக்கும் இந்த அந்தரங்க பிரச்சனைகளை அவரவர் திருமணம் ஆனபின் தெரிந்துகொள்வர் என்கிற சமுதாய பொதுபுத்திதான் இந்த கணவன்-மனைவி உறவு தாண்டிய நிகழ்வுகளின் போது கொடூரமான சிந்தனைகளை மனிதனுக்கு வழங்குகிறது. காமம் மிக இயல்பானது என்றும், ஆண்களுக்கு உண்டான அத்தனை உணர்ச்சியும் பெண்களுக்கும் உண்டென்ற சிந்தனையும் பதின்ம வயதிலேயே புரியவைக்கப்படாததனால்தான் இந்த மாதிரியான தற்கொலைகளும், கொலைகளும் தொடர்ந்து இங்கே நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

இதை வெளிப்படையாக பேசும் சினிமாக்களும் கூட மறைத்து மறைத்து வைக்கப்பட்டே வருகின்றன. இணையம் வந்திருக்கும் இந்த காலகட்டத்தில் மறைத்து வைப்பது கொஞ்சம் கடினமாகிவிட்டதுதான். ஆனால் அதுவே கண்காணிப்பு என்கிற பெயரில் பிள்ளைகள் பெற்றோரிடம், மனைவி கணவனிடம் மறைத்து வைக்கின்ற, அதை மறைத்து வைப்பதற்காய் பொய்  சொல்கின்ற, அதை சோதித்துப் பார்க்க வேண்டி தவறான முடிவெடுக்கின்ற, மேலும் மேலும் இதை சிக்கலாக்குகின்ற ஒரு அமைப்பாகத்தான் வளர்ந்து நிற்கின்றது.

இத்தனை வருட நாகரீக சமூகம் எதை சொல்வது எனபதில் மட்டுந்தான் கவனம் செலுத்துகிறதே தவிர, இதை மறைப்பது தவறு என்பதில் கவனம் செலுத்தவே இல்லை.

இந்த தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

  • பால கணேசன்