வாழ்க்கை ஒரு சினிமா சினிமா!! பகுதி-8

142

என் கல்லூரிக் காலம் மதுரை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்லூரியில் கழிந்தது. பெண் வாசனையே இல்லாத மெக்கானிக்கல் பிரிவு. பற்றாத குறைக்கு எங்கள் கல்லூரி தன்னாட்சி பெற்றது. பாலிமர் பிரிவில் இருந்த ஸ்ரீஜா என்கிற பேச்சியம்மாளுக்கு காதல் கடிதம் கொடுக்க நினைத்தாலே துறைத் தலைவர் தூக்கிப் போட்டு மிதிப்பார் என்பது புத்தியில் உறைந்தே இருந்தது. கேள்வியே கேட்க முடியாது.

img_2563bஇதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி கேள்விகள் கேட்க வேண்டிய அவசியமே யாருக்கும் எழாத வண்ணம் மூன்றரை வருடங்களை வாழ்ந்து கழித்தேன். வருடாவருடம் வருகைப் பதிவேட்டில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க ஊரிலிருந்து அம்மாவோ அல்லது அண்ணனோ வந்து சமாதானம் பேசுவார்கள் என்கிற ஒரே ஒரு அடையாளத்தை மட்டுமே நான் கல்லூரியில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். விடுதியும், வாரத்தில் நான்கு நாட்கள் காலையில் உண்ணும் வெண் பொங்கலும், இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு சுவரேறி குதித்து விடுதிக்குள் நுழையும் த்ரில் நிமிடங்களும், என் பட விமர்சனத்திற்காக காத்திருந்த இரண்டு மூன்று நண்பர்களின் சிந்தனையும் தவிர வேறொன்றும் நினைவுக் கூட்டில் இல்லை. இப்படிப்பட்ட எனக்கு சிவாஜியும், சாவித்திரியும் பாடும் “பசுமை நிறைந்த நினைவுகளே..” பாடலைக் கேட்டால் சிலிர்க்க தான் செய்கிறது. அதை விட அதிகமாக “மனசே மனசே மனசில் பாரம்.. நண்பர் கூட்டம் பிரியும் நேரம்..” கேட்கையில் அழுகையே வருகிறது.

“பசுமை நிறைந்த நினைவுகளே..” பாடலைக் கேட்டால் சிலிர்க்க தான் செய்கிறது. அதை விட அதிகமாக “மனசே மனசே மனசில் பாரம்.. நண்பர் கூட்டம் பிரியும் நேரம்..”

இல்லாத ஒரு உணர்வை இட்டுக்கட்டி இந்தப் பாடல்கள் இழுத்து வந்து குமிக்கின்றன. கல்லூரி வாழ்க்கை எப்படிப் பட்டதாய் இங்கே சமூகத்தில் பாவிக்கப்படுகிறது என்று கொஞ்சம் உற்று நோக்கினால் எனக்கு மலைப்பு தான் மிஞ்சுகிறது. அந்த இறுதி நாள் தந்த கண்ணீர் இங்கே பலருக்கு வாழ்நாள் முழுவதுக்குமான அமுதமாக இருந்துக் கொண்டே இருக்கிறது. கல்லூரி சேர்ந்த முதல் நாள் முதல் இறுதி நாள் வரை நடந்த எல்லாவற்றையும் மனப்பாடமாக ஒப்பிக்கும் நண்பர்கள் எனக்கும் உண்டு.

பெரும்பாலும் சொல்லப்படாத காதல்களின் வலி தான் இந்த இறுதி நாளில் பலருக்கும் நிகழ்கிறது. சினிமாவிலும் கூட அதுவே மிக பிரம்மாண்டமாய் பிரதிபலித்திருக்கிறது. உள்ளம் கேட்குமே படத்தில் ஷாம் பேசும் பிரிவுபச்சார விழா வசனங்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. குறிப்பாக, ” இந்த கூட்டம் இறந்த காலத்துக்கு இரங்கல் கூட்டமாவும் இருக்கலாம்.. இல்ல வருங்காலத்துக்கு வரவேற்புக் கூட்டமாவும் இருக்கலாம்..” என்கிற வரி. ஆம்.. கல்லூரி வாழ்க்கை முடிந்துவிட்டது என்றும், இதற்குப் பிறகு நாம் சந்திக்கப் போவது தான் உண்மையான வாழ்க்கை என்றும் நமக்கு பொட்டில் அடித்தாற்போல காலம் புரிய வைக்கும் அந்த கடைசி நொடி அது. நாம் தயாராய் இருக்கிறோமா இல்லையா என்பதை எல்லாம் அது கண்டுகொள்வதே இல்லை. காலம் எப்போதும் கொடூர அரக்கனாகத் தான் இந்த விஷயத்தில் செயல்படும்.

வாழ்க்கை ஒரு சினிமா சினிமா
முந்தைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

சிநேகிதியே படத்தில் ஜோதிகாவும் அவர் தோழியும் பேசும் வசனங்கள் உண்டு. கல்லூரிக்குப் பிறகான நட்பு ஆண்களுக்கு எப்போதுமே சாத்தியமாகவே தான் இருந்திருக்கிறது. ஆனால் இன்னும் பழமை புரையோடிப் போயிருக்கும் சமூகத்தில் கல்லூரிக்குப் பிறகு உடனே திருமணம். வெளியூர் வாசம் என்று வாழும் பெண்களின் நிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால் தன் உயிருக்கு உயிரான தோழியுடனான நட்பைக் கூட அவர்களால் தொடர வாய்ப்பின்றி போகிறது. ஒவ்வொரு பிரிவுபச்சார விழாவிலும் பெண்கள் அழுவதின் பின்னால் இருக்கும் முக்கியக் காரணம் இதுவாகத்தான் இருக்கும். இன்றைய இணைய யுகத்தில் சமூக வலைதளங்களின் புண்ணியத்தில் பிரிந்தவர்கள் பலரும் மீண்டும் ஒன்று சேர்வதை ஆங்காங்கே பார்க்கிறேன். எந்த சம்பந்தமும் இல்லாத எனக்கே இங்கே பூரிக்கிறது மனது.

சினிமாவில் இந்தத் தருணங்கள் பதிவு செய்யப்படும் பாடல்கள் எல்லாமே உடனே மிகப் பிரபலம் ஆகிவிடுவதை கவனித்திருக்கிறீர்களா? குறிப்பாக காதல் தேசம் படத்தில் வந்த “முஸ்தபா முஸ்தபா ” பாடல். எனக்குத் தெரிந்து இந்த பாடலில்தான் பலரும் இந்த கல்லூரி இறுதி நாள் என்கிற விஷயத்தை மிகத் தீவிரமாக பல வருடங்கள் கழித்து திரையில் ஒரு பாடல் வழியாக உணர்ந்தார்கள் என்று நினைக்கிறேன். அதற்கு முன்னால் இந்த இறுதி நாள் என்கிற விஷயம் திரையில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட படம் ஒரு தலை ராகம்.

ஒரு தலை ராகம் படம் முழுக்கவே கல்லூரி தான். அதிலும் குறிப்பாக அந்த காலகட்டத்தில் இருந்த சிறுநகர கல்லூரி ஒன்றை மிகக் கச்சிதமாக படமாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தின் பிரிவுபச்சார விழா பேச்சை முழுக்க முழுக்க காதலை நோக்கி இயக்குனர் திருப்பியிருந்தாலும் கூட வாகை. சந்திரசேகர் பேசுவதற்கு முன்பு ஒருவர் பேச வருவார். தன் கண்ணாடியை கழட்டிவிட்டு, எல்லோரையும் பார்வையாலேயே ஒருமுறை தன் மனக்கூட்டுக்குள் அடைத்துவிட்டு, பேச வாய் திறக்க முயற்சி பலமுறை முயற்சி செய்து அதில் கடுமையாக தோற்றுப்போய் சில துளி கண்ணீர் சிந்திவிட்டு நகர்ந்து விடுவார். இதைவிட அழகாக அந்த தருணத்தை திரையில் பதிய வைக்கவே முடியாது என்பதற்கு சான்றாக அந்தக் காட்சியை நான் இன்றும் நினைவு கூறுவேன்.

ஆனால் சண்டக்கோழி படத்தில் இதையே இன்னும் வேறு மாதிரியாக ஒரு பாடலில் பதிந்திருப்பார்கள். “சென்னை கோவை மதுரை அட சேலம் நெல்லை-தாண்டா.. நைட்டு பஸ்ஸ பிடிச்சா அட நாளைக்கி பார்க்கலாண்டா..” என்கிற வரிகளிலும் கூட உண்மை பொதிந்திருக்கிறது-தானே? நாம்தான் சற்று அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறோமோ என யோசிக்க வைக்கிறது. இல்லையா?

ஆனாலும் கூட ஒவ்வொரு முறையும் நான் மாட்டுத்தாவணி நோக்கி செல்லும் பேருந்து எங்கள் கல்லூரியை கடக்கையில் பளீரென ஒரு புன்னகை என் மனத்திலும் உதட்டிலும் பூப்பதை வெறும் வார்த்தைகளால் கடந்து விட முடியாது. காரணம் அந்த புன்னகையின் பின்னால் மூன்றரை வருட வாழ்க்கை இருக்கிறது. இன்றும் நெருக்கமாக என்னுடன் இருக்கும் நண்பர்களுடன் நடந்த பாதச் சுவடுகள் அந்த வளாகத்தில் இருக்கிறது. தேர்வுக்கு முதல் நாள் இரவு நான் ராசியான இடம் என்று குறித்து வைத்து படித்த மரம் உள்ளே தான் இருக்கிறது. இன்னமும் இருக்கிறது பசுமையாகவே மனதிலும்.

எனக்கு எழுதும் வாய்ப்பாவது கிடைத்திருக்கிறது. இங்கே அந்த இறுதி நாளின் நினைவுகளை அசைபோட்டு மகிழ நேரம் கூட கிடைக்காத மனிதர்கள் இங்கு ஏராளம். ஏராளம்.

பால கணேசன்