வாழ்க்கை ஒரு சினிமா சினிமா!! பகுதி-9

509

“மணமகளே மருமகளே வா வா .. உன் வலது காலை எடுத்து வைத்து வா வா .” என்கிற பாடல் குழாய் ஸ்பீக்கர்களில் ஒலிப்பதை கேட்கும் தருணங்களில் எல்லாம் ஒரு புன்னகை உதடுகளில் வந்து தானாக ஒட்டிக்கொள்ளும். இரண்டு இதயங்களின் சங்கம விழா என்றும், இருமனம் இணையும் திருமண விழா என்றும் அன்றைய நாளில் ஊரில் திரும்பிய பக்கமெல்லாம் ஒட்டப்பட்டிருக்கும்  சுவரொட்டிகள் வழியாக யாருக்கு திருமணம் என்பதையும் யோசித்துப் பார்க்க மனம் விழையும். தெரிந்த நபர்கள் என்றால் இன்னும் அதிகம் சந்தோசமடையும் மனது.

திருமணம் என்கிற சடங்கு எங்கே எப்போது ஏன் ஏற்படுத்தப்பட்டது என்கிற கேள்விகளையெல்லாம் தாண்டி ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை இரண்டு பிரிவுகளாக பிரிக்கும் ஒரு சக்தியாக இப்போது உருமாறி நிற்பதை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்வோம். திருமணத்திற்கு முன் திருமணத்திற்குப் பின் என்று ஆண், பெண் இருவரின் வாழ்க்கையையும் தனித்தனியாக பிரிக்கும் அளவிற்கு வலிமை பெற்று நிற்கும் இதை ஆயுள் தண்டனை என்றும் இல்லையில்லை அழகான  திருப்பம் என்றும் மாறி மாறி சொல்லிக்கொள்ளும் விவாதம் காலம் காலமாக நடந்துகொண்டே இருக்கிறது. ஆரம்ப கால திரைப்படங்கள் புராண, இதிகாச கதைகளை விட்டு வெளியில் வந்து சமூகக்  கதைகளை தொட ஆரம்பித்த காலகட்டத்தில் இந்தத் திருமணம் என்னும் நிகழ்வும் அதில் முக்கியமான ஒரு பங்கை வகிக்க ஆரம்பித்தது. திருமணத்தின் பால் ஏற்படும் சிக்கல்களும், கணவனிடம் மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற அறிவுரைகளும் நிரம்பிய படங்களாக அவை பரிணமிக்க ஆரம்பித்தன. இன்றளவும் இந்த கணவன் – மனைவி உறவு சமூகத்திலும், சினிமாவிலும் தொடர்ந்து பல உள்ளார்ந்த கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கும் ஒரு குறைவாகத்தான் கையாளப்படுகிறது.

பீம்சிங், கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்களின் படங்களில் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்கிற எளிய சூத்திரம் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டது. இரண்டு தாரம் உள்ள கதைகளிலே கூட ஆணுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக மிகக் குறைவாகவே இருந்தன. அதே காலகட்டத்தில் சமூகத்தில் இரண்டு தாரம் என்பது மிக எளிதான விஷயமாகத்தான் இருந்தது. அக்கா-தங்கையை ஒரே மேடையில் மணமுடிப்பது, தொழில் ரீதியாக வெளியூருக்கு நீண்ட  நாட்கள் தங்கியிருக்கும் சூழ்நிலையில் அங்கேயே இன்னொரு திருமணம் செய்துகொள்வது, குழந்தை பாக்கியம் இல்லை என்பதற்காக மறுமணம் செய்வது போன்றவை தினசரி நிகழ்வுகளாக இருந்த சமயம் என்பதால் இப்படிப்பட்ட படங்கள் மக்களை எளிதாக கவர்ந்தன. ஆனால் அந்தப் படங்களில் எல்லாமே சமூகத்தைப்போலவே பெண்கள் ஒடுக்கப்பட்டனர். நசுக்கப்பட்டனர். அதேவேளையில் இதுதான் நியாயம் என்றும், தர்மம் என்றும் மக்கள் தீவிரமாக நம்பவைக்கப்பட்டனர்.
அது பெண்கள் தியாகிகள் என்றும், மனவுறுதி மிக்கவர்கள் என்றும் இருவேறு வடிவங்களில் தூவப்பட்டது.
இன்னொரு மெல்லிய விஷம் ஒன்றும் சமூகத்தில் தொடர்ந்து தூவப்பட்டுக் கொண்டே இருந்தது. அது பெண்கள் தியாகிகள் என்றும், மனவுறுதி மிக்கவர்கள் என்றும் இருவேறு வடிவங்களில் தூவப்பட்டது. ஆணின் அத்தனை தவறுகளும் இதன்மூலமாக மன்னிக்கப்பட்டது. நல்ல தங்காள் கதையும் கண்ணகியின் கோபமும் இங்கே செவி வழியாக மட்டுமின்றி அதன் அடுத்த பரிணாமமாக திரை வழியே மக்கள் மனதில் புகுத்தப்பட்டது. ஆங்காங்கே பெண்கள் மறுமணம் அவர்களுக்கான கல்வியின் முக்கியத்துவம் போன்றவை வலியுறுத்தப்படும் படங்கள் வந்தாலும் கூட அவை பெரும்பாலும் தோல்விப் படங்களாகத்தான் இருந்தன. அந்த தோல்வியே சமூகத்தை இன்னும் ஆழமாக பிரதிபலிக்கும் விஷயமாகத்தான் பார்க்க வேண்டும்.
கே.பாலச்சந்தரின் வருகை இங்கே மிகவும் முக்கியமானது. மிக மிக வலிமையான பெண்கள் திரையில் அவரின் புண்ணியத்தில் தென்பட ஆரம்பித்தன. திருமணம் என்பது ஒரு சடங்கு மட்டுமே என்பதைப் போன்ற அவர் படங்களின் காட்சிகள் ஆரம்ப காலங்களில் அதிர்ச்சியை அளித்தாலும் அந்த நேரத்தில் பெண்கள் பரவலாக படிக்க ஆரம்பித்திருந்ததால் பெண் சுதந்திரம் என்கிற சத்தம் சமூகத்தின் மூலையில் இருந்து சன்னமாக ஒலிக்க ஆரம்பித்திருந்தது. தங்களுக்கும் மனமுண்டு, தங்களின் தேவைகளும் இங்கே செவி சாய்த்து கேட்கப்பட வேண்டும் என்கிற வாதம் தொடர்ந்து திரை வழியாகவும், சமூகத்திலும் முன்வைக்கப்பட்டது. அந்தப் படங்களின் வெற்றிகள் ஒரு புதுயுக சினிமாவையும், திருமணம் என்கிற பந்தத்தின் வேறொரு கோணத்தையும் அறிமுகப்படுத்த விழைந்தன. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் ஆண்கள் மீது குற்றம் சாட்டும் வண்ணமாக எழுதப்பட்ட வசனங்கள்தான். இதை கே.பாக்யராஜ் போன்ற திறமையானவர்கள் தங்கள் படங்களில் முன்னெடுத்துச் சென்றனர்.
சுசி கணேசன் இயக்கிய பைவ் ஸ்டார் படம் இங்கே என் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அந்தப் படத்தில் இறுதிக்காட்சியில் கனிகா  வசனங்கள் மிகவும் குறிப்பிடத்தகுந்தது. வெறுமனே பெண் பொங்கி எழும் காட்சி என்பதோடு நின்று விடுவதில்லை அது. அதையும் தாண்டி இங்கே ஒரு பெண் குடும்ப அமைப்புக்குள் குறிப்பாக திருமணம் என்னும் சடங்கிற்குள் மீண்டும் மீண்டும் இழுக்கப்பட்டு உழல வைப்பதை அட்டகாசமாக இயக்குனர் காட்சிப்படுத்தி இருப்பார். கவுதம் மேனனின் நீதானே என் பொன்  வசந்தம், செல்வராகவனின் மயக்கம் என்ன போன்ற படங்கள் திருமண வாழ்க்கையில் இன்று பெண்கள் எடுக்கும் முடிவுகளின் பின்புலத்தையும், அதில் வரும் துன்பங்களை எதிர்கொள்ளும் விதத்தையும் எந்தவித பூச்சும் இல்லாமல் இயல்பாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். விண்ணைத் தாண்டி வருவாயா-வில் ஜெஸ்ஸி தன் தந்தையை மீறமுடியாமல்  தவிப்பதும் கூட  வேண்டியதே.
சமூகத்தில் இன்றும் திருமணத்தின்போது முக்கியமாக முன்வைக்கப்படும் ஜோசியம், ஜாதகம் போன்ற விஷயங்களை 1970-80 களில் காட்சிப்படுத்திய அளவில் இன்றுள்ள படங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் யோசிக்கவேண்டியதே. ஏனெனில் இன்றும் பல திருமணங்கள் இதனால் நின்றுபோவதும், தள்ளிப்போவதும் கண்கூடு. பழமையை கட்டிக்காத்தல் வேண்டும்தான். ஆனால் அதன் நம்பகத்தன்மையை இழந்த பின்னும் அதையே கட்டிப்பிடித்து தொங்குவது எந்தவித நன்மையையும் பயக்காது. இதை உணர்த்தும் படைப்புகள் எங்கேனும் ஒன்றிரண்டாவது எட்டிப் பார்த்தல் நலம்.
எல்லா இடத்திலும் இப்போது பெண்கள் இருக்கின்றனர். இது ஆண்களுக்கான வேலை என்ற ஒன்று இப்போது காணாமலே போய்விட்டது. இல்லறத்  தேவைகள் என்கிற விஷயம் இருவருக்குமானது என்கிற எண்ணம் சமூகம் முழுக்க பரவி இருவரும் சமம் என்கிற பார்வை வேர்விட்டு நிற்கிறது. ஆனால் இன்றும் கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுந்தான் என்கிற எண்ணம் மனதிலும், திரையிலும் தொடர்ந்து முன்னிறுத்தப் பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அதை வேண்டி விரும்பி ரசிக்கும் ஒரு சாராரும் இருந்துகொண்டேதான் உள்ளனர். இப்போதும் திருமண வீடுகளில் ” புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே.. தங்கச்சிக் கண்ணே.. சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு முன்னே..” என்கிற பாடல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.
இந்த தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க இங்கு கிளிக்கவும்