வாழ்க்கை ஒரு சினிமா சினிமா!! – பகுதி 1

432

“கணேசா.. அவ இளையராஜா  மியூசிக் மாதிரி. அதுவும் பாரதிராஜா படத்துல வர்ற இளையராஜா மியூசிக் மாதிரி எனக்குள்ள அப்படியே  பொதைஞ்சி போய் இருக்காடா..” – என்று என் நண்பன் ராமு சொன்னபோது என் மனம் தானாகவே  ஆயிரம் தாமரை மொட்டுகளே பாடலை கற்பனை செய்து பார்த்தது. இதைவிட எளிதாக ஒருவன் எப்படி தன் காதலியை தன் நண்பனிடம் அறிமுகப்படுத்தமுடியும்?

சினிமா அதை ஒவ்வொரு முறையும் சராசரி மனிதர்களிடத்தில் செய்கிறது. ஒரு மெல்லிய புல்லாங்குழல் இசை தூரத்தில், வெகு தூரத்தில் இருந்து மிதந்து வந்து நம் காதுகளின் அத்தனை நரம்புகளையும் நிரப்புவது போல இந்த சினிமா நம் வாழ்க்கையின் அத்தனை சம்பவங்களையும் நிரப்பிவிட்டுப் போகிறது.
ராமு ஒரு நவீன அனாதை. அப்பா உண்டு. அண்ணன் உண்டு. அக்கா உண்டு. ஆனால் அனாதை. பிரித்த சொத்தில் ஒரே ஒரு அறை கொண்ட சின்னதொரு வீட்டுக்கு சொந்தக்காரன். தனி வீடு என்பதை விட தனி அறை என்றுதான் சொல்லமுடியும். கல்யாணமாகிவிட்டது என்கிற ஒரே ஒரு தகுதியால் அவன் அண்ணனுக்கு மூன்று அறைகள் கொண்ட வீடு கிடைத்தது. இரண்டும் அருகருகேதான். ஆனால் பல லட்சம் மைல் தூரங்கள் அளவுக்கு அவர்கள் உறவு பிரிந்திருந்தது. சம்சாரம் அது மின்சாரம் படம்போலதான்! ஒற்றைக்கோட்டுக்கு இருபுறமும் மனிதர்கள் நடப்பார்கள். சிரிப்பார்கள். அழுவார்கள். ஆனால் அந்தக்கோடு சீனப் பெருஞ்சுவரின் வலிமையை ஒத்ததாய் நீண்டிருக்கும்.
எதிரே இருந்த தெருவில் அவன் தன் தேவதையை கண்டான். பார்வைப் பரிமாற்றங்கள் பலமுறை நிகழ்ந்த பின்னர் ஒரு மே மாத வெயில்நாளின்போது நிகழ்ந்த ஒரு அம்மன் கோவில் திருவிழாவின் முடிவில் அவள் அவனின் காதலியானாள்.வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் திருவிழாக் காட்சிகள் ஞாபகம் வருகிறதா? குச்சி ஐஸ் உதடு தாண்டி அவள் கன்னங்களின் ஓரம் வடிய கழுத்தையும் தாண்டி கூட இறங்க  எத்தனித்த வேளையில் இவன் பார்ப்பதை உணர்ந்து கைக்குட்டையால் அவசர அவசரமாக  துடைக்கும் காட்சி நினைவில் எழுகிறதா? அது இவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சிறுதுளி.
நாய்கள்  எதுவும் துரத்தாமலேயே அவள் ராமுவின் கைகளை பற்றினாள். ராமு அதை இறுக்கப் பற்றிக்கொண்டான். கிராமமும் அற்ற நகரமும் அல்லாத  பேரூராட்சியில் காதல் கொள்வதைவிட கொடுமை வேறெதுவும் இல்லை என்பதை நீங்கள் ஒரு  பேரூராட்சிவாசியாக இருந்தால் மட்டுமே உணரமுடியும். எல்லாரும் தெரிந்தவர்களாய்  இருப்பார்கள் கிராமத்தைப்போல.. ஆனால் வயல்வெளிகளோ, அடர்ந்த வனமோ அங்கே இருக்காது. டூரிங் கொட்டாய்களில் காதல் வளர்ப்பது கடினம் என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனால் காதல் வளந்தே தீருமல்லவா?
இளையராஜாவின் பக்தன் ராமு. “நான் தேடும் செவ்வந்தி பூவிது..” என அவன் பாட தொடங்குகையில் கண்மூடி அதை ரசிக்கும் யாரும் கரைந்து போவது உறுதி. அவன் தந்தை அவனை திட்டி,”இனிமே உன்னை என் வாழ்க்கையில பார்க்கவே கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிறேன்..” என சொன்ன இரவில், ஊரின் எல்லையில் இருக்கும் அரசாங்க மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் சிறுபாலத்தில் அமர்ந்து அவன் பாடிய,” எம்பாட்டு எம்பாட்டு.. நெஞ்சினிக்கும் பூங்காத்து..” பாடலை கேட்டு நான் அழுத நொடிகள் ஒரு கிணற்றின் பாறைச் சுவர்களுக்குள்ளே கூடுகட்டி வாழும் தவளையின் சத்தம் போல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எல்லா சூழ்நிலைகளுக்கும் அவனிடம் ஒரு இளையராஜா பாடல் இருக்கும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த படத்தில் அந்த பாடல் இடம்பெறும் நேரத்து சம்பவங்களும் அவன் வாழ்க்கை சம்பவங்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருப்பதுதான்.
“விழியில் விழி மோதி இதயக்கதவொன்று திறந்ததே..” என பாடி தொடங்கிய அவன் காதல், “மாசி மாசம் ஆளான பொண்ணு  மாமன் உனக்குத்தானே..” என மருவி பின்னர்,” நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான் பேரு விளங்க இங்க வாழனும்..” என்று தொடர்ந்தது. ஆனால் எங்குமே,” காதல் கசக்குதய்யா..வர வர காதல் கசக்குதய்யா..” என் அவன் பாடியதேயில்லை என்பது சிறப்புதானே! “மண்ணில் இந்தக் காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?” என்பதன் உதாரணமாகவும் கூட அவன் என் அருகில் இருந்தான்.
களவாணி படத்தில் மாடு மேய்க்க போவதாய் சொல்லிவிட்டு அறிவழகனும், மகேஸ்வரியும் காதல் கொள்ளும் காட்சிகள் மறந்திருக்கமாட்டீர்கள். இங்கே அவள் பெர்பேரியம் பறிக்கப் போவதாக சொல்லிவிட்டு ஊரின் எல்லையில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு வருவாள். தனியாய் அனுப்பிவிடுவார்களா என்ன? கூடவே அவளின் பக்கத்துவீட்டு சிறுவனும் வருவான். ஒரு லேடி பேர்ட் சைக்கிள். அது அங்கு வருவதற்கு அரைமணி நேரம் முன்பே அந்த யமஹா பைக் காத்திருக்கும் புன்னகையோடு!
களவாணி படத்தில் அந்த சிறுவனை ஏமாற்ற கண்ணாமூச்சி விளையாட்டு என்றால் இங்கே செடிகளை பறிக்கும் விளையாட்டு. பச்சைநிற இலைகள் இல்லாத செடியிலிருந்து ஒரு பூவை பறித்து வர சொல்லி அவள் அந்த சிறுவனை அனுப்பிவிட்டு அவன் மடியில் அமர்ந்துகொள்வாள். ராமு கனிகளை பறிக்க ஆரம்பிப்பான். “யாருக்கா  இந்த  அண்ணன்?” என திரும்பி வரும் சிறுவன் கேட்கையில் ராமு அவளுக்கு ஹைபிஸ்கஸ் ரோசாசைனன்சிஸ்-இன் குடும்பத்தைப்பற்றி விளக்கிக் கொண்டிருப்பான். அவளும் சிரித்துக்கொண்டே,”இது அண்ணன் இல்லடா.. மாமா..” என்பாள்.
இப்போது மாமன் சிறுவனுக்கு பச்சை இலைகள் இல்லாத செடி இந்த காட்டில் எங்கே இருக்கும் என்று வரைபடம் வரைந்து சொல்ல அவன் இன்டியானா ஜோன்ஸாக மாறி இல்லாத செடியை இருள் படர்ந்த காட்டுக்குள் தேட துவங்குவான். இங்கே இவர்கள் காதலில் பல புதிய வெளிச்சங்களை இருவரும் காண தொடங்கி இருப்பார்கள்.
காதல் படம் உங்களுக்கு நினைவிருக்கலாம். மறந்திருக்கவும் முடியாது. ஐஸ்வர்யாவும், முருகனும் அகலமுடியாத ஒரு ஆழத்தில் நெஞ்சுக்குள் புதைந்து கிடக்கின்றனர். காதல் படத்தின் முதல் செய்தித்தாள் விளம்பரத்தை உங்களில் எத்தனை பேர் ஞாபகம் வைத்திருப்பீர்கள் என தெரியவில்லை. ஒரு ஒற்றைப் பாலத்திற்குக் கீழ் ஒரு ஆணும், பெண்ணும் பேசிக்கொண்டிருக்க பாலத்தின் அருகில் ஒரு மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டியும்  நின்றிருக்கும். அது ஒரு ஓவியம். என் மனதில் இன்றும் ஆணியடித்து நின்றிருக்கும் ஓவியம். அந்த ஓவியம் வரைவதற்கு முன்பே அதை நேரில் கண்டவன் நான். முருகன் = ராமு. ஐஸ்வர்யா = அவள்.
ஒரு நீண்ட இரவின் நடுப்பொழுதில் அவர்கள் ஊரைவிட்டு வெளியேறினர். சாதி தன் கொடூர கரங்களை வீசி அவர்களை தேடியது. காதல் நீரைப்போன்றது அல்லவா? கைகளால் துழாவத் துழாவ அது நிற்காமல் நகர்ந்துகொண்டே இருந்தது. இறுதியில் விருதுநகர் அருகே ஒரு குக்கிராமத்தில் அடைக்கலமானது. தேடிக்கொண்டிருந்த கரங்கள் களைப்பாகி, பின்னர் இந்தப் பழம் புளிக்கும் என்று தனக்குத்தானே சமாதானமாகி அடங்கியது.
மூன்று குழந்தைகளோடும், அடுத்தநாள் உணவுக்கு ஆண்டவனை வேண்டிக்கொண்டு இருந்தாலும் கூட அன்போடும் ராமுவும் அவளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வீட்டுக்கு மட்டும் ராணியாக இருந்த அவள் இப்போது அந்த ஊரின் ராணி. காதல் உருவாக்கிய ராணி.
சினிமாவை எதார்த்தம் மிஞ்சும் கதைகள் உண்டு என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். அதற்கு அத்தாட்சி இது.
பால கணேசன்
இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்