வைகோ திடீர் விலகல்

238

சட்டப் பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீரென அறிவித்துள்ளார்.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் வைகோ இன்று மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென அவர் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

மதிமுக சார்பில் மாற்று வேட்பாளர் விநாயக் ரமேஷ் கோவில்பட்டி தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.

ஏன் மனுதாக்கல் செய்யவில்லை என்பது குறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

“சாதி ஓட்டுகளை முன்னிறுத்தி திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதன் காரணமாகவே பசும்பொன் தேவர் சிலைக்கு நான் நேற்று மாலை அணிவிக்க செல்லும்போது என்னை தடுத்து நிறுத்தினார்கள்.

இந்தத் தேர்தலில் என்னை மையமாக வைத்து தேவர் – நாயக்கர் இடையே சாதி மோதல் ஏற்படுத்த திமுக சதியில் ஈடுபட்டுள்ளதாக எனக்கு நம்பகத்தன்மையான தகவல் கிடைத்தது. எனவே சாதி மோதலை தவிர்க்கும் வகையில் கோவில்பட்டியில் நான் போட்டியில் இருந்து இருந்து விலகுகிறேன்.

விநாயக் ரமேஷ் கோவில்பட்டியில் மதிமுக சார்பில் போட்டியிடுவார் . தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபடுவேன்” என்று வைகோ கூறினார்.