வனம் தேடும் சருகுகள்

56

அது அழகாய் தான் இருக்கிறது
ஆளை அடித்து விரட்டாது
அமைதி கொஞ்சும் வசீகரத்தோடு
மயில்தோகை வண்ணத்தில்…
உப்பரிகையும் ஒன்றுண்டு
எப்போதும் ஆடாத ஊஞ்சல்கள் இரண்டோடு
ஓய்வறையும் தனியறையும்..
இல்லாத சாமிக்கு நிரந்தரமாய்
ஓர் அறை உண்டு!
நவீனம் வழியும் கழிப்பறைகளோடு
படுக்கையறைகள் இரண்டுண்டு!
சமையற்கூடமோ;
ஒரு நடுத்தர இந்தியரின்
ஒட்டுமொத்த வீட்டளவு!
ஆங்கோர் மூலையில் அழகியல் கடலென
காட்சிக் குடுவைக்குள் நீரொடு கயல்களும்!
அடுத்த மூலையில் புத்தரின் போதனை
பொம்மைகள் தவங்கலையாமல்!
பழுதான மிதிவண்டி பிஞ்சுக் கால்மறந்து
படர்ந்த தனிமையோடு!
பல்வண்ண மலர்களும்
பசுமையும் சோலையும்
பக்கத்திற் கொன்றென முற்றம் நிரப்பி
வண்ணம் சுமந்த வீட்டில் இன்று
ரோசாவை நட்ட மகள்
வெளிநாடு போயிட்டா!
நாய்க்குட்டி வளர்த்த மகன்
தனிக்குடிக்கு மாறிட்டான்!
வெளுத்த முடியோடும் முகத்தோடும்
நரைகூடிய கிழம் இரண்டு
நடுங்கும் உடல்கொண்டு
இனித் தனித்தெங்கு போகுமடா?
இந்தத் தள்ளாத வயதினிலே !!?

-பிறைநிலா