வண்ணமிழந்த வானவில் – ஓவியர் ஜீவானந்தனுடன் ஒரு நேர்காணல்

250

60 வருஷமா கோவையில சினி ஆர்ட்ஸ் நடத்திகிட்டு வரோம்.. கையால் வரையப்படுற பேனர் தான் எங்க அப்பா ஆரம்பிச்சு வச்சது. அப்போ நான் சின்ன வயசில இருக்கும் போதே ஓவியம் மேல ஆர்வம். 1981ல அப்பா இறந்த பின்னாடி எங்க பெரிய குடும்பம் சுமக்க வீட்டுக்கு மூத்தபுள்ள நான் எடுத்து நடத்துறேன். கே. மாதவன் தான் கையால் வரையப்பட்ட பேனர் கலையை அறிமுகப்படுத்தி வச்சார். அந்த காலத்து முரசொலி, தினசரி, மாத காலண்டர்ல திரைப்பட விளம்பரம் பிரசுரமாகும்..

rajini by  jeeva

குறிப்பா சொல்லனும்னா எஸ்.எஸ்.வாசன் ஐயா படங்களில், சந்திரலேகா படத்திலும் பெரிய விளம்பரம் ஆரம்பிச்ச காலம் அது. சைன் போர்ட்ல எனாமல் பெயிண்ட் வச்சி தகரத்துல வரைவாங்க. அதுல வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் அதிலும் தனக்கென ஒரு தனி ஸ்டைல், எழுத்துல மாற்றம் கொடுத்து ரசிக்கற மாதிரி செய்யவும் ஆளுங்க இருந்தாங்க.

சைன் போர்ட் முன்னாடி சொன்னது போல தகரம்ல வரையறது. பேனர் அப்படி இல்லாம காடா துணியில வரையறது. பேனர்ல வரையும் போது பார்த்தீங்கனா நேரிடையா அப்படியே காடா துணியில வரைய முடியாது. அதுக்குனு தனி நடைமுறை இருக்கு. முதல்ல ஒரு ரசாயண கலவை அடிக்கனும். அது காஞ்ச பிறகு அதுல ஒரு பிரிமியர் கோட் அடிக்கனும். இதுக்கு எல்லாம் தனி ஆளுங்க வேணும். உடல் உழைப்பு அவசியம். அதுவும் காய்ந்த பிறகு தான் அந்த பேனர்ல ஓவியம் வரைய கை வைக்க முடியும்..

திரைப்படங்களை பொறுத்த வரைக்கும், முதல்ல ஒரு புரொஜ்சன் வச்சி ஸ்கெட்ச் பண்ணுவோம். பெரும்பாலும் இதை இரவுல தான் பண்ணுவோம். இதுல வடிவமைப்பு சரியா வரணும்.. குறிப்பா எந்த உருவ படம் பெருசா இருக்கனும் எந்த உருவம் சின்னதா வரணும்னு இங்க தான் முடிவு செய்யனும். அப்போ தான் ஓவியம் சிறப்பா வரும்.அப்பா வரைய ஆரம்பிச்ச காலகட்டம் வண்ணப்படங்கள் இல்லை.. கறுப்பு வெள்ளை படங்கள் மட்டும் தான். இந்த படங்களுக்கு தான் வண்ணக் கலர்ல பேனர் வரைய ஆரம்பிச்சாங்க. அந்த காலகட்டத்துக்கு அது நிறைய செலவு பிடிக்கிற விஷயமும் கூட. வண்ணம் சேர்க்கிறதால ஓவியரோட திறமை வெகுவாக வெளிய தெரிஞ்சது.

vijayakanth by jeeva

எந்த கட்டுப்பாடும் இல்லாம சுதந்திரமா வரைஞ்ச காலம் அது. சென்னையில நிறைய ஆளுங்க இருந்தாங்க. ஏன்னா அங்க நிறைய நிறைய விளம்பர கம்பெனிகள் இருந்தது. சென்னைய விட்டிங்கனா, சேலம், மதுரை, திருச்சி, கோவையில் மட்டும் தான் பேனர் வரைய ஆளுங்க உண்டு. தமிழகத்தில எந்த ஊர்ல சினிமா பேனர் வரையனும்னாலும் இந்த 5 ஊர்ல இருக்கிற விளம்பர கம்பெனிகள் தான் பண்ணும்.. கையால வரையற ஓவிய பேனர்கள் நிறைய பேருக்கு நேரிடையாகவும் மறைமுகவாகவும் வேலை வாய்ப்பை கொடுத்துச்சி. பேனர்ல பார்த்தீங்கனா, காடா துணியில கோட்டிங் அடிக்கிற ஆர்ட்டிஸ்டுகள், அப்புறம் ஓவியம் வரையற ஆளுங்க, ஓவியம் மேல எழுத்துற நபர்கள்னு இருப்பாங்க. காடா துணியை மரச்சட்டத்தில அடிச்சி பேனரா உருவாக்கி தர தச்சர்களும் இருப்பாங்க. ஒரு விளம்பர கம்பெனியில குறைந்தபட்சம் 10பேராச்சும் இருப்பாங்க..

இப்போ இருக்கிற மாதிரி டெக்னாலஜி அப்போ இல்லை. இப்போ எல்லாம் ஒரு நகரத்தில 4 தியேட்டர்ல ஒரே படம் வெளியிடறாங்க. அந்த கால கட்டத்தில பார்த்தீங்கனா, 3-4 மாவட்டத்திற்கு 10படம் ரிலீஸ் ஆகும். வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ்னா வினியோகிதர்கள் தான் எந்த தியேட்டர்ல படம் ரிலீஸ் பண்ணலாம்னு முடிவு செய்வாங்க. ஒரு வாரத்திற்கு முன்னாடி தான் இது நடக்கும். பணம் கொடுங்கல்-வாங்கல் எல்லாம் இந்த ஒரு வாரத்துல நடக்கும். எங்களுக்கு தகவல் சொல்லுறது 2நாளைக்கு முன்னாடி தான் தகவல் சொல்லுவாங்க.

அந்த இரண்டு நாளும் இரவுப் பகலா வேலை நடக்கும். மரக்கட்டையில கட்-அவுட் வைக்கிறதுல இருந்து காடா பேனர் வரைக்கும் அந்த இரண்டு நாள்ள தான் பண்ணுவோம்.

எல்லா தியேட்டரும் ஒரே மாதிரி இருக்காது. சில தியேட்டர் சின்னதா இருக்கும். அங்க சின்ன பேனர் தான் வைக்க முடியும். சில தியேட்டர்ல பெரிய பேனர் வைக்கலாம். இந்த அளவுகளை தயார் நிலையில வச்சி இரண்டு நாள்ள வேலைய முடிக்கனும். சவாலான விஷயம் தான். ஆனா மனசுக்கு திருப்தியா செய்வோம்.

parthiban by jeeva

அப்பா தான் ஓவியம் வரைவார். ஓவிய விளம்பரம் வாங்குறது, அதுக்குக்கான பணம் வசூல் பண்ணுறதுனு அப்போ ஆளுங்க இருந்தாங்க. சில சமயம் வினியோஸ்தர்கள் ஏமாற்றி இருக்காங்க. சில சமயம் பணம் வசூல் பண்ணுற ஆளுங்க ஏமாற்றி இருக்காங்க. எல்லாத்தையும் தாண்டி ஓவியத்தை விடாம செஞ்சோம்னா அது ஓவியக்கலை மீது இருந்த ஆர்வம் தான்..

இப்போ 15 பேர் செய்யிற 2 நாள் வேலைய ஒரே கம்ப்யூட்டர் 20நிமிசத்தில செஞ்சிடுது. 20 அடி பேனர் இருந்தாலும் இப்போ ஃபிளக்ஸா 20 நிமிசத்தில செஞ்சிடறாங்க.

கோவையில மட்டும் அப்பவே 80-100 ஷைன் போர்டு கலைஞர்கள் இருந்தாங்க. சைக்கிள்ல பேர் எழுதறதுல இருந்து சர்பத் கடைக்கு பெயர் போர்டு எழுதற வரைக்கும் தூள் கிளப்பிட்டு இருப்பாங்க. ஷைன் போர்டுக்கு சங்கமும் இருந்துச்சி. இப்போ 1,2 பேரு தான் இருக்காங்க. அந்த ஓவிய கலைஞர்கள் எல்லாம் வீட்டுக்கு பெயிண்டு அடிக்கவும், குளத்துவேலைக்கு போனது தான் நவீன டெக்னாலஜினு சொல்லுற பிளக்ஸ் போர்டு புரட்சியின் விஞ்ஞான மாற்றம்.

நான் எல்லாம் வாழ்க்கை முழுக்க பேனர் வரைஞ்சவன். இப்போ நான் சினிமா பேனர் வரைஞ்சி கிட்டத்தட்ட 10 வருசம் ஆகுது. கையில் வரையற பேனர் கலை டெக்னாலஜி என்ற பேர்ல அடிப்பட்டு போச்சி. இப்போ என்னால பழைய வேகத்தில 10,20அடி பேனர் எல்லாம் வரைய முடியுமானு தெரியல. வேலை இல்லை.. அந்த தொடர்பு குறைஞ்சி போயிடுச்சி.

நிறைய போட்டிகள் உருவாச்சி. புதியதாக வர ஓவியர்கள், எங்ககிட்ட தொழில் கத்துக்கிட்டு போனவங்கனு நிறைய பேரு பேனர் தொழில்ல இருந்தாங்க.. எங்க அளவுக்கு அவங்களால தாக்கு பிடிக்க முடியல. புது புதுசா நிறைய புதுமைகள் செஞ்சோம். ஜானி படத்துக்குகான எங்க பேனர் பெரிய அளவுல பேசப்பட்டது. ஜானி பேனர்ல ரஜினி சாரும், ஸ்ரீதேவி மேடமும் நிக்குற பேனர் பெரிய விளம்பரமா அமைந்தது. மகேந்திரனின் உதிரிப்பூக்கள், நண்டு போன்ற படங்களும் பெரிய அளவிலான பேசப்பட்ட விளம்பர பேனர்கள். நண்டு படத்துக்கு ஒரு பக்கம் ஹீரோ தலை கண்ணு வரைக்கும் இன்னொரு பக்கம் நண்டோட கொடுக்கு வரைஞ்சி பிரமாதமா பண்ணினோம்.

எனக்கு இயற்கையாவே சினிமா மேல ஆசை உண்டு. எந்த டைரக்டர் படத்துக்கு எப்படி செய்யனும்னு சிரத்தை எடுத்து கவனமாக செய்வோம். லே-அவுட் எல்லாம் பிரமாதமா செஞ்சி இருப்போம். இப்போ வர பிளக்ஸ் போர்ட்ல லே-அவுட் பெரும்பாலும் இருக்கிறது இல்ல. அப்ப்டியே இருந்தாலும் படுமோசமா இருக்கும். இணைந்த கைகள் படத்திற்கு எக்மோர் ரயில்வே ஸ்டேசன் தத்துரூபாம வரைஞ்சி இருப்போம். அதுக்கு நிறைய வரவேற்ப்பு இருந்தது. ஓவ்வொரு கலைஞனுக்கும் ஒவ்வொரு முகபாவணை இருக்கும். அதை பிரமாதமா செய்யனும்.

10 அடி பேனர்ல ரஜினி சார் முகம் மட்டும் வரைவேன். அதே அளவு பேனர் அதே வண்ணம்.. ஆனா ஒவ்வொரு பேனரிலும் ரஜினி சார் வித்தியாசமா தெரிவார். அவ்வளவு நுணுக்கம் இருக்கும். சிவாஜி சார், எம்ஜியார் பேனர் எல்லாம் வரையும் போது பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் வரும்.. அந்த படத்தில எந்த மாதிரி இருக்காங்கனு பேனர் பார்த்து தெரிஞ்சிக்க. அப்படி வர ரசிகர் கூட்டத்தில சில ஏகலைவன்கள் உருவாகி பெரிய அளவுல ஓவியரா வந்த நிகழ்வும் உண்டு. இப்போ பிரமாதமா வரையற மணிராஜ், முத்துராஜ் எல்லாம் அப்போ ஓவியத்தை ரசிக்க வருகிற பள்ளி மாணவர்கள். இப்போ நாங்களும் பிளக்ஸ் பண்ணுறோம். எப்போவாச்சும் பழைய படங்களுக்கு பேனர் வரைவோம்..

பேனருக்கும் பிளக்ஸ்கும் 15வருட இடைவெளி வந்தாச்சி. பேனர் வரைய தேவையான மூலப் பொருட்கள் இப்போ எங்க கிடைக்கும்னு யாருக்கும் தெரியல. வண்ணங்கள் எல்லாம் பொடி பொடியா பவுடர் மாதிரி இருக்கும். வெள்ளை கலர் மட்டும் களிம்பு மாதிரி கெட்டியாக இருக்கும். பிளக்ஸ்ல நிறைய சின்ன சின்ன தொழில்கள் அழிஞ்சி போச்சி. நாங்களாச்சும் எப்போதாவது பழைய படத்திற்கு பேனர் வரையறோம். கார்பெண்டர், தச்சர், லே-அவுட் வரையற ஆட்கள்னு இப்போ யாரும் பேனருக்கு தனியா இல்ல.

திரைப்பட பேனர் மேல வெளிநாட்டு மக்களுக்கும் மோகம் உண்டு. இந்தியா வந்து அதை புகைப்படமா எடுத்து அதை புத்தகமா வெளியிட்டவங்களும் இருக்காங்க. திருப்பூர் அருகே பெருந்துறையில தொழிலாளர் சட்டம்/ தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய பேனர் வரைய ஒரு சுவிட்சர்லாந்து குழு முடிவு பண்ணி இந்தியா முழுவதும் தேடி இருக்காங்க. யாரும் அவங்க கற்பனைக்கு சரியா அமையல. திரைப்பட பேனர் வரையற ஓவியனுக்கு அவ்வளவா சொந்த கற்பனை இருக்காது. அதனால அவங்க திருப்திக்கு யாரும் கிடைக்கல. யாரோ சொல்லி எங்ககிட்ட வந்தாங்க.

நான் முதுகலை சட்டப்படிப்பு படிச்சேன். அதனால சொல்லுறத புரிஞ்சி அவங்க சொல்ல சொல்ல ஒரு பென்சில் லே-அவுட் போட்டேன். அது அவங்களுக்கு ரொம்ப பிடிச்சி போய் சுவிட்சர்லாந்துல இருந்து ஆட்கள் வந்து நாங்க பேனர்ல வரையறத வீடியோ எடுத்தாங்க. அது புத்தகமாக கூட வந்து இருக்கு. ஷைன் ஆர்ட்ஸ்ல தகரம்ல மேல மேல ஓவியம் வரைஞ்சிக்கலாம். பேனர் ஆர்ட்ஸ்ல பேனர் நாள் ஆக ஆக பொழிவிழந்து மக்கி போகும். பிளக்ஸ் உங்களுக்கு அப்படி இல்ல. அது ஒரு நெகிழி. காலத்தால் அழிக்க முடியாதது. இன்னிக்கு பெருசா கொண்டாடப்படுற பிளக்ஸ் நிச்சயமாக சமுதாயத்துக்கு தீங்கு தான் விளைவிக்கும்.

20-25 லட்சம் இருந்தா ஓவிய அறிவு கூட இல்லாத ஒருத்தரால பிளக்ஸ் இயந்திரம் வாங்கி முதலாளி ஆகிட முடியும். ஒரு கலை இப்படி தான் கலைஞனிடமிருந்து முதலாளி வர்க்கத்துக்கு போயிடுச்சி.

நாங்க வரைஞ்ச காலத்தில விநியோகஸ்தர்கள், அவங்க கூட சில ஜால்ராக்களும் வருவாங்க. இந்த ஜால்ராக்கள் தான் முதலாளிகிட்ட நல்ல பேர் வாங்க எதாச்சும் குறை சொல்லுவாங்க. பிளக்ஸ்ல அதே போல தான். 100 ரூபாய் வேலை இருக்கும். ஒரு நாற்காலிய பக்கத்தில போட்டு அதை இப்படி மாத்துங்க இப்படி மாத்துங்கனு சொல்லிகிட்டே இருப்பாங்க.

கலைஞனுக்கு கற்பனை வளம் மக்க செய்யும், மக்காத ஒன்னு தான் பிளக்ஸ்.

நிறைய வெற்றிப்படங்களுக்கு பேனர் வரஞ்சி இருக்கோம். கோவையில இருந்து காசு தராம ஏமாத்தினவங்க அதிகம். எல்லா கஸ்டத்தையும் தாங்கி ஓவியக்கலையை உயர்த்திப் பிடிச்ச எந்த பேனர் ஓவியனும் கோட்டோவியனும் பங்களா கட்டி வாழல.

ஒரு கலை முதலாளிங்க கைகளுக்கு வர்த்தகமா மாறி செத்துக் கொண்டு இருக்கு.