வயிறினம்

215

இரண்டு நாட்களாக உணவேதும் உண்ணாமல், தண்ணீர் மட்டும் குடித்து வந்தான். இனி அவனால் பசி பொறுக்க முடியாது. நடை தளர்ந்து, உடல் சோர்வுற்று இருந்தான். நாவில் ஊறிய உமிழ் நீரை விழுங்கி விழுங்கி அவன் நா வறண்டுப் போயிருந்தது.
எத்தனையே பேரை வாழவைத்து, உலகத்துக்கே சோறு போட்ட பரபரப்பான தஞ்சை நகரம், முகுந்தனை சற்றே கூடுதலாகத் தான் சோதித்துப் பார்த்தது.

முகுந்தன் இரண்டு நாட்களாய் வேலை கேட்டு ஏறாத கடைகள் இல்லை. டீக்கடை, பெட்டிக்கடை, ஹோட்டல் என்று அவன் பசித்த வயிறுடன் வேலை கேட்டு அலைந்தான்.  வேலைக்கு ஆட்கள் தேவையிருந்தும் , அவனை பணியில் அமர்த்தாததற்கு ஒரு காரணமும் இருந்தது.

வலது கன்னத்தில் உள்ள தீப்புண் காயம் அது, முகுந்தன் கைக் குழந்தையாய் இருக்கும் போது, விபத்தில் பற்றி எரியும் வீட்டில் தாய் தந்தை தீக்கு இறையாக, ஊர்க்காரர்கள் போராடி முகுந்தனை மட்டும் காப்பாற்றினர். நெஞ்சுப் பகுதியிலிருந்து கன்னம் வரை நீண்டுப் பரவியிருந்த தீப்புண் காயத்துடன்.

அம்மாவும், அப்பாவும் தீ விபத்தில் இறந்தப் பின் ஐந்து வயது வரை அப்பத்தா தான் வளர்த்தாள். வயது முதிர்ந்த அப்பத்தாவும் தனிமையில் தவிக்கவிட்டுப் போன பின் முகுந்தனின் வாழ்க்கை கேள்விக் குறியானது. சித்தப்பா வீட்டில் சில காலம், மாமா வீட்டில் சிலகாலம் வாழ்ந்தான். மகிழ்ச்சி, மரியாதை, அன்பு இல்லாத வெற்று வாழ்க்கை.

பள்ளியில் சக நண்பர்கள் அவனோடு நட்புக் கொள்ள அஞ்சினார்கள். எட்டி உதைத்தப் பின் கால்களை சுற்றும் சிறு நாய்க்குட்டியைப் போல, சிறு வயதிலிருந்தே அன்புக்காக ஏங்கினான்!

சபிக்கப்பட்ட வாழ்க்கை, யாரும் இல்லாதவனுக்கு எதுக்கு படிப்புனு, ஆறாம் வகுப்போடு சித்தி படிப்யை நிறுத்திவிட்டு வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டாள். தெரியாமல் செய்த சிறு தவறுக்கு அடுப்பில் இருந்த கொள்ளிக் கட்டையால் கால்களில் சுட்டுவிட்டு,
“தீயில வெந்து போன மூஞ்சை வச்சிருக்கான் நான் கால்ல சுட்டதா வலிக்க போகுது”…..இவ்வாறு சொன்னாள்.

அதற்குப் பின் தான் முகுந்தன் வீட்டை விட்டு வெளியேறினான். அழகான மழழை முகம் ஒரு புறம், தீப்புண் பட்டு அருவருப்பான முகம் ஒரு புறம். அவன் வாழ்கையை ரணமாக்கியது. அந்த டீக்கடையில் மாலை வேலையென்பதால், கூட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. ஒரு புறம் டீ ஆத்திக் கொண்டிருந்தார் த்ரீ ரோஸஸ் படத்துடன் வெள்ளை பனியன் போட்ட மாஸ்டர். மறுபுறம் கருப்பு எண்ணெய்க் கடாயில் வாயில் பீடி புகையுடன் பலகாரம் போட்டுக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.

மூன்று, நான்கு முறைக்கு மேல் அந்தக் கடையில் தண்ணீர் குடித்தாகிவிட்டது. இனியும் போனால் அவர்கள் நம்மை விரட்டலாம். இல்லை எச்சரித்து அனுப்பலாம்.
பசி காதை அடைத்தது. இந்தக் கடையில் இரண்டு முறைக்கு மேல் வேலை கேட்டாகி விட்டது.

இந்த பாழாய்ப் போன தீப்புண் பார்த்து வேலை தர மறுத்தனர். இவர்களிடம் இப்போது பசியார ஒரு வடையோ, போண்டாவோ கேட்கலாம் என்றால்( கடன் அன்பை முறிக்கும்) பலகை அவனைத் தடுத்தது. எல்லாக் கடைகளிலும் இருப்பது தானே, கேட்டுவிடலாம் என்று எண்ணி, இது வரை போண்டா வடையைப் பாக்காதவாறு சட்னியோடு வாயில் வைத்துக் குதப்பி கொண்டிருந்த வாடிக்கையாளர் கூட்டத்துக்குள் புகுந்து டீக்கடையின் முதலாளி முன்பு வந்து நின்றான். காசு வாங்கும் அவசரத்தில் இருந்தார் முதலாளி.

“தம்பி இங்க வேலையேதும் காலி இல்லப்பா. கூட்ட நேரத்துல இந்த மாதிரி வந்து நிக்காதப்பா. இந்த மூஞ்சியை வச்சிகிட்டு…… வியாபாரம் கெட்டுப் போகும்” (முதலாளி முகம் சுழித்தார்.).

அவனுக்கு கன்னத்தில் ஓங்கி அறைந்த மாதிரி இருந்தது. நம்மீது பாவப்பட இவ்வுலகத்தில் ஒருவர் கூடவா இல்லை.? கண்கள் கலங்க, பசித்த வயிறுடன் கிடுகிடுவென வெளியேறினான்.

தூரத்தில் ஒரு பேருந்து அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.  இந்தப் பேருந்தில் விழுந்து செத்துடலாம் நான் வாழ்வது சிரமம் தான். இந்த நரகத்தில் எத்தனை எத்தனை மனிதர்கள். ஒருவர்கூட என் பசித்த முகம் பாராமல் கடந்துப் போகிறார்களே.
பேருந்தின் சக்கரத்தில் உடல் நசுங்கி நான் இறந்து போனப்பின் இங்கு அவசரமாய் என்னைக் கடந்துப் போனவர்கள் எனக்காகக் கண்ணீர் விடலாம்? இல்லை யார் பெத்தப் பிள்ளையோ இப்படி அநியாயமாய் செத்துப் போச்சே? என்று நமக்காக வருத்தப் படலாம். அதைத் தவிர பொது மக்களுக்கு வேறென்ன முடியப் போகிறது. கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

இறந்த பின் நாம் என்ன ஆவோம் என்று அவனுக்கு தெரியாது. ஒரு முறை தன் தாய் தந்தை முகம் காண அவனுக்கு ஆவல் பீறிட்டது. வலிந்தக் கண்ணீரை துடைத்துக் கொண்டு தயாரானான். பேருந்து அவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. கடைசியாய்த் தன் தலையைத் திருப்பி அந்த டீக்கடையைப் பார்த்தான்.
கடையில் கூட்டமும் தட்டில் அடுக்கி வைத்திருந்த எண்ணெய் போண்டாவும் குறைந்திருந்தது. தன்னைநோக்கி வந்துக் கொண்டிருந்த அந்தப் பேருந்து அவனுக்கு பத்தடிக்கு முன்னே நின்று விட்டது. அவனுக்கு அதுவும் “எட்டாப் பழம் புளித்தது போல” ஏமாற்றமாக இருந்தது.

அவன் சாகத் தயாரானான். ஒருவேளை கடவுள் நான் வாழ ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றாரோ என யோசித்தான். அவன் வயிற்றுக்குள் பாம்பைப் போல ஏதோ ஒன்று சுழன்றது. அது அவனின் வயிற்றுப் பகுதியை அகோரப் பசியுடன் கடித்துத் திண்ணத் துவங்கியது. ஏதாவது இப்போதே தின்றுவிடு எச்சிலாக இருந்தாலும் பரவாயில்லை. பலநாள் ஆனதால் வீணாகிப் போன பழையதாய் இருந்தாலும் பரவாயில்லை. இல்லையேல் என் பசிக்கு நீயும் உன் உயிரும் பழியாகிவிடுவீர்கள் என்று வயிற்றினுள் இருந்து ஒரு குரல் கத்தியது.

ஒருவேளை இரண்டு வேளை இல்லை இரண்டு நாட்கள் பசி. அது வார்த்தைகளால் விளக்க முடியாத கொடுமை.  இந்த உலகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்போது இங்கு இல்லை. கடைசியாய் உண்ணாமல் இறந்துப் போவதை விட, கையேந்தி பிச்சை கேட்கலாம் . முடிவுக்கு வந்தவனாய் பேருந்திலிருந்து இறங்கி வருபவர்களிடம்….

“அம்மா சாப்பிட்டு இரண்டு நாட்களாச்சி. அண்ணே சாப்பிட்டு இரண்டு நாட்களாச்சி” ஒவ்வொருவராய்க் கையேந்திப் பதறியது அந்தப் பிஞ்சு உள்ளம். அவனை யாரும் ஒரு பொருட்டாக எடுக்காமல் கடந்துப் போயினர். அவர்களுக்கு அது ஒன்றும் புதிதில்லை பழகிய ஒன்று தான். அவன் நிறுத்தவில்லை அவன் அடி வயிறிலிருந்து “அவரிடம் போய் கேளு. . இவரிடம் போய் கேளு என்று கத்தினார்கள்.

கடைசியாய் சோர்வுற்றான் . அவனால் நிற்க முடியவில்லை. பேருந்தின் மீது சாய்ந்துக் கொண்டான். அடுத்த வேலை உணவில்லை. வாழ்க்கை எவ்வளவு கொடுமை என்று அவனுக்கு புரிந்தது. உலகத்தில் உணவில்லாமல் இருப்பவர்கள் பல. அதில் நானும் ஒருவர் தான் என்பதின் உண்மை மெல்லமாய் அவனுக்கு புரியத் தொடங்கியது.
விழுங்க நாவில் உமிழ்நீர் இல்லை, அழுதுத் தீர்க்கவும் கண்களில் கண்ணீர் இல்லை.
கடைசியாக அந்த டீக்கடையைப் பார்த்தான்.

அவசரக் கோலத்தில் தின்றதால் ஒரே கடியில் தவறி தரையில் விழுந்த அந்தப் போண்டா அவன் கண்களில் பட்டது. ஓடு ஓடு எடுத்துத் தின்று உயிர் வாழ்ந்துக் கொள். அது உனக்கானது. எச்சில் தின்பது உனக்கு அவமானம் இல்லை என்று அவன் வயிற்றிலிருந்து அந்த மிருகத்தின் குரல் ஒலித்தது.

அதற்காக வருத்தப்பட வேண்டியவர்கள் இவர்கள் தான். எச்சில் போண்டாவை நோக்கி நடக்கத் துவங்கினான். அவனால் நடக்க முடியவில்லை. தன் உடலோடு ஏதோ ஒரு பெரும் பாராங்கல்லை சேர்த்துக் கட்டிவைத்தார் போல உடல் கனத்தது.

முகுந்தன் எச்சில் போண்டாவை நோக்கி வருவதைப் பார்த்து, அந்த டீக்கடையின் டீ மாஸ்டர் மனமிறங்கி முதலாளியிடம் அனுமதியுடன் காகிதத்தில் இரண்டு போண்டாவை மடித்து முகுந்தனை நோக்கி நடந்துவரும் அதே சமயம்……

”அம்மா சாப்பிட்டு இரண்டு நாளாச்சி, அண்ணா சாப்பிட்டு இரண்டு நாளாச்சு” என்று பயணிகளிடம், கையேந்திய முகுந்தனைப் பார்த்த ஜன்னலோரம் இருக்கையில், அமர்ந்திருந்த வெற்றிலை பாக்குக் கிழவி தன் சுறுக்குப் பையிலிருந்து. சீவல் ஒட்டிய ஐந்து ரூபாய் தன் மடியில் துடைத்து முகுந்தனை நோக்கி வீசினாள். அது அவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. தன் முன் கிடந்த அந்த எச்சில் போண்டா அவன் கண்களிலிருந்து மறைந்தது.

இப்போது அவனுக்கு சுவாசிக்க சிரமமாக இருந்தது. அவன் சுவாசத்தை இளுக்க முயன்று முடியாமல் மயங்கித் தரையில் சரிந்தான்.

இன்னும் ஓரிரு நாழிகையில் டீ மாஸ்டர் காகிதத்தில் மடித்துக் கொண்டு வரும் போண்டா முகுந்தனை வந்துச் சேரலாம். இல்லையேல் ஜன்னலோர வெற்றிலைப் பாக்கு பாட்டி வீசிய ஜந்து ரூபாய் நாணயம் அவன் காதுகளுக்கு மிக அருகாமையில் வந்து விழலாம். இல்லையேல் இவ்வுலகில் வாழ வழியற்று இன்னும் ஓரிரு நாழிகையில் முகுந்தன் இறந்தும் போகலாம்.

எம்.கலைக் கூத்தாடி