உலகின் முதல் டொமைன் எது தெரியுமா?

113

இண்டெர்நெட்டின் தொடக்க காலத்தில் இண்டெர்நெட் என்பது மக்களின் பயன்பாட்டுக்கு இல்லை. ராணுவத்திலும் ஒரு சில அரசு நிறுவனங்களிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதெல்லாம் இண்டர்நெட்டில் ஒரு வெப்சைட்டுக்குள் நுழைய வேண்டுமென்றால், ஐ.பி முகவரியை வைத்து தான் நுழைய வேண்டும். உதாரணமாக கூகுள் இணையதளத்தை பார்க்க வேண்டும் என்றால், ப்ரவுசரில்  http://74.125.224.72/ என்று கொடுத்துதான் உள்ளே செல்ல முடியும். பின்பு இண்டெர்நெட் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்த போது, இது போல் எண்களைக் கொடுத்து இணையதளத்தைப் பார்ப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒவ்வொரு இணையதளத்துக்கும் இணையான ஐ.பி எண்களை நினைவில் வைத்துக் கொள்வதும் சாத்தியமில்லை என்ற நிலை வந்த போது தான் டொமைன் நேம் என்ற யுக்தியை அறிமுகப்படுத்தினார்கள். அது என்னவென்றால் DNS (Domain Name System) எனும் ஒரு பெரிய டைரக்டரியை உருவாக்கி அதில் ஒவ்வொரு ஐ.பி எண்ணுக்கும் இணையாக ஒரு பெயரை பதிவு செய்தனர். உதாரணமாக http://74.125.224.72/ என்ற எண்ணுக்கு நேராக Google.com என்ற பெயரை பதிவு செய்தனர். இதில் .Com என்பது கமர்சியல் இணையதளங்களைக் குறிப்பதற்காக. ஐ.பி எண்களை நினைவில் வைத்துக் கொள்வதை விட இது எளிதாக இருந்ததால் இதுவே எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

நாம் ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டுமென்றால், இந்த DNS எனும் டைரக்டரியில் நமது டொமைன் பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் நமது இணையதளத்தை அனைவரும் படிக்கும் வண்ணம் ஒரு இணையதள முகவரியை உருவாக்க முடியும். இந்த டைரக்டரியில் இதுவரை 28 கோடி டொமைன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1985 ஆம் வருடம் மார்ச் 15 ஆம் தேதியில் தான் முதல் டொமைன் இந்த டைரக்டரியில் பதிவு செய்யப்பட்டது. முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட அந்த இணையதளம் Symbolics.com. இது சிம்பாலிக்ஸ் எனப்படும் கம்பியூட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் இணையதளம். அதே ஆண்டில் மொத்தம் ஐந்து கம்பெனிகள் டொமைனை பதிவு செய்தன. அடுத்த ஆண்டான 1986 ல் தான் புகழ்பெற்ற ஐ.பி.எம் நிறுவனம் தனது டொமைனை பதிவுசெய்தது. 1987 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனமும், 1991ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்கள் டொமைனைப் பதிவு செய்தன. 2009 ஆம் ஆண்டில் இந்த இணையதளத்தினை சிம்பாலிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து XF.com எனும் நிறுவனம் விலை கொடுத்து வாங்கியது.

-தி.விக்னேஷ்