யாருமற்றவன்

77

வெறுமை தாக்கும்
பொழுதுகளில் எல்லாம்
மளுக்கென உடையும்
இந்தக் கண்ணீர்த் துளிகள்
வெட்கம் இல்லாமல்
எதிர்பார்க்கின்றன
துடைத்துவிட ஒருவிரலையேனும்…
வீம்பாய் பேசித் திரிந்து
வீணடித்த பொழுதுகளில்
எடுத்து வைத்திருக்கலாம்
ஒரு துளியேனும்
இந்த வெறுமையை
விழுங்கித் தீர்ப்பத்தற்கு….

அடுக்கி வைத்த பொருள்காட்டி
அழுது புரண்ட மகனை
தரதரவென இழுத்துச் சென்று
பின் மீண்டும் திரும்பிவந்து
கேட்டதை வாங்கித் தந்து
முந்தாணையில் மூக்குத் துடைத்து
இடுப்பில் இடிக்கிக்கொண்டு
கடந்து செல்லும் ஓர் அம்மாவைப்
பார்க்கமாலே இருந்திருக்கலாம் தான்
ஒரு பார்வையற்றவனாய் இருந்திருந்தால்….

ஐயோ வேணாண்டி என
குறுகுறுத்துச் சிரிப்பவனை
ஹே வாடா என
விரல் பிண்ணி இழைந்து
குதூகளிக்கும் யாரோ ஒருத்தியின்
குரல் கேட்காமலேயே இருந்திருக்கலாம் தான்
ஒரு செவித்திறனற்றவனாய் இருந்திருந்தால்…

சரசரக்கும் புடவை ஒலி
நாசி மறுக்க முடியா மணவாசம்
கூச்சலும் இரைச்சலுமாய்
கலகலக்கும் அந்தத் திருமணமண்டபம் கடந்து
செல்லும் வழியில் தான்
அவன் வாழ்ந்து வருவதாக
இருக்கும் இடமொன்று
இல்லாது இருந்திருக்கலாம் தான்
யாருமற்றவன் என்று
அவனுக்கிருக்கும் பேரைச் சேர்த்து.

-சாயா சுந்தரம்